search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை திடீர் மாயம்"

    தக்கலை அருகே இன்று திருமணம் நடக்க இருந்த புதுமாப்பிள்ளை திடீரென மாயமானதால் பெண் வீட்டார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் மணப்பெண்ணுக்கு வேறு வாலிபருடன் திருமணம் நடைபெற்றது.
    தக்கலை:

    தக்கலை அருகே உள்ள மருவூர்கோணத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31). இவர் வெளிநாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். 

    இவருக்கும், பறைக்கோட்டைச் சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நடத்த பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டது. அழகியமண்டபம் சந்திப்பில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று மாலை திருமண நிச்சயதார்த்தமும், இன்று திருமணமும் நடைபெறும் என்று அழைப்பிதழ்கள் அச்சிடப்பட்டு வினியோகம் செய்யப்பட்டது. திருமணத்துக்காக சதீஷ்குமார் வெளிநாட்டில் இருந்து சொந்த ஊர் வந்திருந்தார். திட்டமிட்டபடி நேற்று மாலை அழகிய மண்டபம் திருமண மண்டபத்தில் நிச்சயதார்த்தம் வெகுவிமரிசையாக நடந்தது. உறவினர்களும் திரளாக பங்கேற்றனர். விருந்து நிகழ்ச்சிகளும் நடந்தது. 

    இன்று திருமணம் நடைபெற இருந்த நிலையில் நள்ளிரவில் புதுமாப்பிள்ளை சதீஷ்குமார் மாயமானார். அதிகாலையில் அவரது அறைக்கு சென்ற உறவினர்கள் சதீஷ்குமாரை காணாதது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரது அறையில்  உள்ள மேஜை மீது நிச்சயதார்த்தத்தின் போது மணப்பெண் வீட்டார் அணிவித்த 9 பவுன் தங்கச் சங்கிலி மட்டும் இருந்தது. 

    மேலும் மண்டபத்துக்கு வெளியே சதீஷ்குமார் நிறுத்தியிருந்த மோட்டார் சைக்கிளும் மாயமாகி இருந்தது. உறவினர்கள் தேடுதலில் ஈடுபட்டபோது மோட்டார் சைக்கிள் தக்கலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டு இருந்தது. சதீஷ்குமார் மாயமானது பற்றி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. சதீஷ்குமார் எதற்காக மாயமானார் என்பது பற்றி போலீசார் விசாரிக்கிறார்கள். 

    சதீஷ்குமார் திருமணம் பிடிக்காமல் மோட்டார் சைக்கிளில் தக்கலைக்கு தப்பி வந்து அங்கிருந்து பஸ்சில் வேறு எங்காவது சென்றாரா? அல்லது அவரை யாராவது கடத்திச் சென்றார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். 

    சதீஷ்குமார் மாயமானதால் மணப்பெண் அதிர்ச்சியுடன் காணப்பட்டார். சதீஷ்குமாருடன் அவருக்கு நடக்க இருந்த திருமணம் நின்று போனது. திருமண விழாவுக்கு வந்த ஏராளமானோர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

    இதைத்தொடர்ந்து மணப்பெண்ணின் பெற்றோர், வைகுண்டபுரத்தைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். வாலிபரும் அதற்கு சம்மதம் தெரிவித்ததால் அதே மண்டபத்தில் மணப்பெண்ணுக்கும், அந்த வாலிபருக்கும் திருமணம் நடைபெற்றது.
    ×